|
கந்தசாமி என்ற பிரும்மாண்டத் தமிழ்ப் படம் சில கேள்விகளை சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு நியாயமான பதில்களைத் தேடிக் கண்டடைந்தால்,தமிழ் வணிக சினிமா உலகம் உருப்படும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் தங்களுக்குப் பிடித்தமான பதில்களுக்கு மட்டுமே காதைத் திறந்து வைத்துக் கொள்ளும் பழக்கம் உடைய சினிமா உலகத்திடம் அதிகம் எதிர்பார்ப்பதற்கில்லை.
கந்தசாமி படத்தை உருவாக்கியிருக்கும் முக்கியமான மூன்று பேருடனும் எனக்கு ஓரளவு பரிச்சயம் உண்டு. தயாரிப்பாளர் எஸ்.தாணுவை சுமார் 20,22 வருடங்களுக்கு முன்பு நான் தேசிய முன்னணி ஆதரவாளனாக இருந்தபோது அறிவேன். சினிமாவின் கட் அவுட் கலாசாரத்தை அரசியலில் பரவலாக்கியதில் தாணுவுக்கு முக்கியமான பங்கு உண்டு. சென்னையில் தி.மு.கவின் அரசியல் கூட்டங்களுக்கும் தலைவர்களுக்கும் சினிமா பாணியில் பேனர்கள் வைப்பதை அவர்தான் தொடங்கினார். சினிமா விநியோகத் துறையில் மிகவும் அடிமட்டத்தில் பல வருடங்கள் உழைத்து அடிபட்டுப் பின்னர் பெரிய தயாரிப்பாளரானவர் அவர். பத்திரிகைத்துறையில் எழுத்தாளர் சாவி பலருக்குப் பெரும் அதிரடி விளம்பரங்கள் செய்து ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொடுத்தது போல, சினிமாவில் வேலை செய்தவர் தாணு. அவருடன் எப்போது பேசினாலும், சினிமா உலகம் பற்றிய இன்னொரு பரிமாணத்தை உனர்ந்துகொள்ள உதவும் விதத்தில் அவர் உரையாடல்கள் அமைந்திருக்கும்.
இயக்குநர் சுசி. கணேசனுடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இல்லை என்றாலும் ஒரே பத்திரிகை அலுவலகத்தில் நான் சீனியராகவும் அவர் ஜூனியராகவும் இருந்திருக்கிறோம். இளம் நிருபர்களில் துடிப்பானவராக அறியப்பட்டிருந்த அவருடைய திரைப் படங்கள் எதுவும் என்னை வசீகரித்ததில்லை. திருட்டுப் பயலே படத்தில் ஒரு பாடல் காட்சியில் சோனியா அகர்வால், ஜீவனிடம் ஒழுங்கான வேலை தேடிப் பிழைக்க ஆரம்பித்தபின்னர் தன்னிடம் திருமணம் பற்றி வந்து பேசும்படி சொல்லி அனுப்பும் இடத்தில் மட்டுமே ஒரு சிறு பொறி எனக்குத் தென்பட்டது.
நடிகர் விக்ரம் இயக்குநர் ஸ்ரீதர் படத்தில் கதாநாயகனாவதற்கும் முன்னரே டி.வி.தொடரிலும், சிகரெட்டுக்கெதிரான முழு நீளத் தமிழ்ப் படத்திலும் கதாநாயகனாக நடித்தபோதிலிருந்தே அவரது நடிப்பைக் கூர்மையாக கவனித்து வந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் தன்னை சிவாஜியின் வாரிசாக வார்த்துக் கொள்ள எப்போதும் கமல்ஹாசன் முயற்சித்து வந்துள்ள போதிலும், அவரை விட அந்த இடத்தைப் பிடிப்பதற்கான அதிக தகுதிகள் உடையவர் விக்ரம்தான்.
ஆனால் தன்னை எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் ஆகியோரின் தொடர்ச்சியாக வார்த்துக் கொள்ளவே விக்ரம் விரும்பி வந்திருப்பதால், இதுவும் இல்லை; அதுவும் இல்லை என்ற கதிக்குத் தன்னைத் தானே ஆளாக்கிக் கொண்டவர். அதன் இன்னொரு அடையாளம்தான் அவர் கடுமையாக உழைத்து, உழைப்பை வீணாக்கியிருக்கும் கந்தசாமி படம்.
இப்போதெல்லாம் இந்தி, தமிழ், ஆங்கிலம் என்று எந்த மொழிப்படம் வெளியானாலும், அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அதைப் பற்றிய பார்வையாளர் விமர்சனம் இணைய தளத்தில் வெளியாகிவிடுகிறது. இந்த விமர்சனங்கள் படத்தின் வசூலை கடுமையாக பாதிப்பதாக கமல்ஹாசன் முதல் அபிராமி ராமநாதன் வரை பல திரைப்பட பிரமுகர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.
இணையம் சார்ந்து சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளவர்களில் கணிசமானவர்கள் அல்லது பெரும்பான்மையானவர்கள் ஐ.டி துறை இளைஞர்கள்தான். இவர்கள் கும்பல் கும்பலாகச் சென்று படம் பார்க்கும் இயல்பில் உள்ளவர்கள். இணையத்தில் வரும் விமர்சனக் கருத்துகள் வெளி நாட்டில் படம் பார்க்கும் தமிழர்களிடமும் முக்கியமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இன்று வெளிநாட்டு தமிழர்களிடம் வசூல் என்பது தமிழ் வணிக சினிமாவுக்கு முக்கியமான வருவாய்களில் ஒன்று.
இந்தச் சூழ்நிலையில் கந்தசாமி வெறும் நொந்தசாமி என்று ரிலீசாகி ஒரு மணி நேரத்துக்குள்ளேயே விமர்சனங்கள் இணையத்தில் வந்துவிட்டது படத்தை பாதித்திருக்கலாம். சுப்ரமணியபுரம், பசங்க, நாடோடிகள் முதலிய படங்கள் பார்வையாளர் ஆதரவைப் பெற்றதிலும் இணைய விமர்சனங்களின் பங்களிப்பு கணிசமானது என்பதை இங்கே சேர்த்தே பார்க்க வேண்டும்.
இணைய விமர்சனங்களை மீறி கந்தசாமி படம் சென்னை நகரில் மட்டும் முதல் வாரத்திலேயே ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துவிட்டதாக சென்னை விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் அறிக்கை விட்டிருக்கிறார். படம் சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் தோல்விப்படமாகவே மக்களால் கருதப்படுகிறது. எது உண்மை என்பது தாணு, ராமநாதன் ஆகியோருக்கு அடுத்தபடி வருமான வரி அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியக் கூடிய உண்மையாக இருக்கும்.
நல்ல சினிமாக்கள் வேண்டும் ; வணிக சினிமாவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கருதும் எல்லாரும் கேட்கும் கேள்வி கந்தசாமி என்ற படம் வெற்றி பெறும் என்று அதை எடுத்தவர்கள் எப்படி நம்பினார்கள் என்பதுதான்.
ஐந்தாறு பழைய படங்களின் கதைகளையும் பாத்திரங்களையும் சம்பவங்களையும் கட் அண்ட் பேஸ்ட் செய்து ஒரு கதையை சுசி கணேசன் சொன்னால் அது ஜெயித்துவிடும் என்று தாணுவும் விக்ரமும் எப்படி நம்பினார்கள் என்பதே கேள்வி.
அதிலும் படத்தின் விரசமான பாடல்களைப் பற்றி விக்ரம் அளித்திருக்கும் பேட்டி படு அபத்தமானது. இந்தப் பாடல் வரிகள் குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்றும் குழந்தைகளை மனதில் வைத்தே எடுத்ததாகவும் விக்ரம் சொல்லியிருப்பது பற்றி ஒரு ஃபிராய்டியன் ஆராய்ச்சியே செய்யலாம்.
கந்தசாமி போன்ற படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகி தோல்வியடையும்போதெல்லாம் பல பழைய உண்மைகளே மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கப்படுகின்றன. 1. பிரும்மாண்டம், பெரிய பட்ஜெட் என்பதெல்லாம் எந்தப் படத்தையும் காப்பாற்றிவிடாது. கதையம்சம்தான் முக்கியம். 2. தொழில்நுட்ப ஜிகினாக்கள் படத்தைக் காப்பாற்றாது. கதைதான் காப்பாற்றும்.
புதிதாக சில உண்மைகள் கந்தசாமியின் தோல்வியால் நிரூபிக்கப்படுகின்றன. 1. நவீன தொழில்நுட்பம் சினிமா உருவாக்கத்துக்கு உதவுவது போலவே, சினிமா ரசிகரின் பர்ஸைக் காப்பாற்றவும் உதவும். டி.ஐ, சி.ஜி எல்லாம் சினிமாவை பாலீஷ் செய்ய உதவுகிற மாதிரி இண்ட்டர்நெட் ரசிகர்களிடையே வேகமாக கருத்து பரவ உதவிக் கொண்டிருக்கிறது. இதைப் புறக்கணிக்க முடியாது. தடுக்கவும் முடியாது. 2. வணிக சினிமாவின் ஃபார்முலாவுக்கும் ஒரு சேச்சுரேஷன் லிமிட்டேஷன் உண்டு. ஒரே ஃபார்முலாவை நையப் புடைத்து அடித்தால் பூமராங் ஆகி எதிர் அடிதான் விழும். வணிக சினிமாவுக்குள்ளும் புதுப் புது ஃபார்முலாக்களைக் கண்டுபிடித்தால்தான் தாக்கு பிடிக்க முடியும்.
நண்பர்கள் தாணு, விக்ரம் இருவருக்கும் ஒரு வேண்டுகோள்: தயவுசெய்து சினிமாவை மறுபடியும் இயக்குநர்-தயாரிப்பாளர் மீடியமாக மாற்ற உதவுங்கள். சிவாஜி கணேசன் முதல் கமல்ஹாசன் வரை வணிக ரீதியிலும் ரசிகர் ஆதரவிலும் ஜெயித்த படங்கள் எல்லாம் இயக்குநர் பார்வைக்கு முதன்மை கொடுத்தவைதான். ஸ்டார்களும் தங்களை இயக்குநரின் படைப்பாற்றலுக்கு உட்படுத்திக் கொள்ளும்போதுதான் சிறந்த வெற்றிகளை அடைகிறார்கள்.
இன்னும் அசிஸ்டண்ட் டைரக்டர்களாக இருந்துகொண்டிருக்கும் எண்ணற்ற சுசி.கணேசன்களுக்கு ஒரு வேண்டுகோள்: தயவுசெய்து நடிகரையும் ஸ்டாரையும் வைத்து ஸ்கிரிப்ட்டுகளை உருவாக்கிக் கொண்டு உங்கள் எதிர்காலத்தையும் ரசிகர்கள் எதிர்காலத்தையும் பாழாக்காதீர்கள். கதைகளை நம்புங்கள்.
இந்த உண்மைகள் ஹிந்தி சினிமா உலகத்துக்கும் அதன் ஹீரோக்களுக்கும் கூடப் புரிந்துவிட்டன. நம்மவர்கள் உணர்வது எப்போது ?
இந்த வாரப் பூச்செண்டு:
இறப்புக்குப் பின் தன் உடல் உறுப்புகளை தானமாக எடுத்துக் கொள்லலாம் என்று கையெழுத்திட்டு முன்மாதிரிகளாக விளங்கும் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர் மனைவி துர்காவதி ஆகியோருக்கு இ.வா.பூ.
இந்த வாரத் திட்டு:
எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற முற்போக்கான திட்டத்தின் கீழ் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளித்து இதுவரை 205 இளைஞர்களை அர்ச்சகர் தகுதிக்குரியவர்களாக்கிய தமிழக அரசு அதில் 3 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதற்காக இ.வா. தி.
இந்த வாரக் கேள்வி:
வெறும் 4 ஆயிரம் சமபளம் வாங்கும் சத்துணவு, அங்கன்வாடி, பால்வாடி ஊழியர்களுக்கு மேலும் வெறும் 500 ரூபாய் கூட ஊதிய உயர்வு தருவதற்குப் பிடிவாதமாக மறுத்து வரும் தமிழக அரசு, ஏற்கனவே பத்தாயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வரும் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு மேலும் 6 ஆயிரம் முதல் 21 ஆயிரம் வரை அள்ளிக் கொடுப்பதன் ரகசியம் என்ன ?
குமுதம் 31.8.2009
|